
தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி மகன் புங்கலிங்கம் (34). இவர் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று தூத்துக்குடி – பாளை ரோட்டில் உள்ள எம்ஜிஆர் பூங்கா அருகே பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பூங்காவுக்குள் நுழைய முயன்றாராம். இதனை காவலாளியாக பணிபுரியும் மறவன்மடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் செல்வம் (44) என்பவர் கண்டித்தாராம்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த செல்வம், போலீஸ்காரர் புங்கலிங்கத்தை சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த புங்கலிங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தார்.
உயிரிழந்த போலீஸ்காரர் புங்கலிங்கத்துக்கு, காசியம்மாள் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..