பெரம்பலூர் அருகே வனவிலங்குகளை வேட்டை ஆடியது தொடர்பாக தாய் மகன் கைது..

674

திருச்சி: பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு என்கிற கவிக்குமார்(வயது 30). எம்.எஸ்சி. எலக்ட்ரானிக் மீடியா மற்றும் எம்.பி.ஏ. முடித்துள்ள இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். விலங்குகளை வேட்டையாடுவதில் ஆர்வம் உள்ள இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி மாவட்ட வன எல்லைக்கு உட்பட்ட நெடுங்கூர் காப்புக்காடு பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட வன அதிகாரி சுஜாதா நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில், வனச்சரகர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் மற்றும் பாடாலூர் போலீசாருடன் இணைந்து கடந்த 12-ந் தேதி பாடாலூருக்கு சென்று கவிக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போன் மற்றும் கணினியை ஆய்வு செய்ததில், அவர் தான் வேட்டையாடிய வன விலங்குகளை அதில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், அவர் மெசஞ்சர் வாயிலாக பாகிஸ்தானில் உள்ள ஒரு கிளப்புடன் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன், கம்ப்யூட்டர், வேட்டைக்கு பயன்படுத்தும் ஹெட் லைட் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. வனவிலங்குகளை வேட்டையாடியதை கவிக்குமாரின் தாயாரும், நெய்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவருமான லட்சுமி(53) கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பேரில், அவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவிக்குமார் மற்றும் அவரது தாய் லட்சுமி ஆகிய இருவரையும் வனத்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின்பேரில் அதே பகுதியில் உள்ள கொளத்தூரை சேர்ந்த மகாலிங்கம் (58) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here