Home அரசியல் 5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி: கூட்டாளியுடன் காசியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்..

5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி: கூட்டாளியுடன் காசியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்..

0
5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி: கூட்டாளியுடன் காசியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்..

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் போலீஸ் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் போக்சோ வழக்கு உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பாக காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் பல பெண்களை ஏமாற்றியதால் காசி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும், காசிக்கு உறுதுணையாக அவருடைய நண்பர்கள் 2 பேர் இருந்துள்ளனர். அதையடுத்து அவர்களில் ஒருவரான நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ என்பவரை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் உள்ள மற்றொருவரை தேடி வருகின்ற னர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இதற்கிடையே பெண்களின் வாழ்வை சீரழித்த காசி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

பின்னர் காசி மீதான 6 வழக்குகளின் விசாரணை ஆவணங்களும் நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டன. உடனே சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

5 நாட்கள் காவல்

இந்த நிலையில் சிறையில் உள்ள காசி, அவருடைய நண்பர் டேசன் ஜினோவை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 12-ந் தேதி நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை 15-ந் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினார். அதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோ இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மனு தாக்கல் செய்தார். அதில், காசி மற்றும் டேசன் ஜினோவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து நீதிபதி கிறிஸ்டியன் வருகிற 19-ந் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியதால் காசியை பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here