சென்னையில் கஞ்சா போதையில் பைக்கில் அசுர வேகத்தில் வந்த இளைஞர்களை பிடித்தபோது போக்குவரத்து ஆய்வாளர் காயமடைந்தார்.

404

முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை முழுவதும் போலீஸார் தொடர் வாகன சோதனையில் உள்ளனர். அந்த வகையில் சென்னை புரசைவாக்கத்தை அடுத்த கெல்லீஸ் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை மடக்கி அபராதம் விதித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு வாக்கிடாக்கியில் ஒரு தகவல் வந்தது. அயனாவரம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் இரண்டு இளைஞர்கள் சாலை விதிகளை மதிக்காமல் வருவதாகவும், அவர்கள் போலீசார் சோதனைக்கு நிற்காமல் தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கெல்லீஸ் வழியாக வந்து கொண்டிருப்பதால் மடக்கிப் பிடிக்கும்படியும் போலீஸ் அதிகாரிகள் வாக்கி டாக்கியில் உத்தரவிட்டனர்.

இதனால் உஷாரான போக்குவரத்துப் பிரிவு போலீசார் கெல்லீஸ் சிக்னலில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது பைக்கை நிறுத்தாத அந்த இளைஞர்கள் போலீசார் மீது மோதினர். இதில் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் குமரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மற்ற போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த ஆய்வாளர் குமரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தலைமைச்செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், கொளத்தூரைச் சேர்ந்த விஜய் என தெரியவந்தது. அவர்கள் கஞ்சா போதையில் அப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை நடத்திய போது போதையில் தெரியாமல் செய்து விட்டோம் என்று போலீசாரின் காலில் விழுந்து அந்த 2 இளைஞர்கள் கெஞ்சினர். பின்னர் அந்த இளைஞர்களை போலீஸார் ஆம்புலன்ஸில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here