
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த சிட்டுலிங்கம் மகன் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரது அக்கா அனிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) திருமணம் ஆகாமல் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று பார்த்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அனிதாவிடம் கேட்டபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த குமாரும், கார்த்திக்கும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று கூறினார்.
இதனையடுத்து சரவணன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் தமிழரசி புலன் விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீபுரந்தான் காலனி தெருவை சேர்ந்த அம்மாசி மகன் குமார், குமார் மகன் கார்த்திக் என்கிற காளிதாசன், தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் அனிதாவின் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்தது. இதனைதொடர்ந்து இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இதன் பின்னர் ,ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சந்திரகலா புலன் விசாரணை மேற்கொண்டு இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் பரிந்துரை செய்தார், துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,V.R. ஸ்ரீனிவாசன் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் D. ரத்னா பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.