
கேரளாவைச் சேர்ந்த சமூக மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனது அரை நிர்வாண உடலின் மீது தன்னுடைய இரண்டு குழந்தைகளும் ஓவியம் வரையும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கேரளாவைச் சேர்ந்த சமூக மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, பெண் சமூக ஆர்வலர்கள் பலர் கோயில் செல்ல முயன்றனர். அதில் கேரளாவை சேர்ந்த சமூக மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளர் பாத்திமா ரெஹானாவும் ஒருவர். ரெஹானா கோயிலுக்குள் செல்ல முயன்ற போது, இந்து அமைப்புகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதால் பிரச்சனையும் எழுந்தது.
இந்நிலையில் அவரது அரை நிர்வாண உடலில், அவரின் இரண்டு குழந்தைகளும் ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை அவருடைய யூடியூப் பக்கம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் உடலரசியல் என்ற தலைப்பில், அழகு என்பது எப்படி பார்ப்பவர்களின் கண்களுக்கு ஏற்றவாறு உள்ளதோ அதைப்போல ஆபாசம் என்பது பார்ப்பவர்களின் கண்களை பொருத்தே அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரெஹானா பாத்திமா, கடந்த சில ஆண்டுகளாகவே சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார். மேலும் ஆண்களின் உடலைப்போன்றே பெண்களின் உடலும் சாதாரணமானது என்றும், பெண்களின் உடல் ஒரு போகப்பொருளோ அல்லது ஆபாச பொருளோ அல்ல என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். குறிப்பாக சமூகத்தில் அடுத்த தலைமுறையினராவது பெண்களின் உடலை வெறும் உடலாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும், அதனை வியாபார பொருளாகவோ அல்லது, ஆபாசமாக பார்க்ககூடாது எனவும் தெரிவித்துவருகிறார்.
இதன் தொடர்ச்சியாகவே அவர், அவருடைய குழந்தைகளை வைத்தே உடலரசியல் என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோவை கண்டித்து கேரளாவில் உள்ள பாஜக நிர்வாகி ஒருவர் ரெஹானா பாத்திமா மீது புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவில் 18 வயது பூர்த்தியடையடையாத அவரது குழந்தைகள் இருவர் உள்ளதால் இது குழந்தைகளுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவல்லா காவல்துறையினர் ரெஹானா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோக்களை பதிவிடுவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஏன் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.