ஆவின் பாலில் மீண்டும் ஊழல்!
தி.மலையில் ஆவின் பாலில் தண்ணீர் கலந்து விற்ற 8 பேர் கைது..போலீசார் நடவடிக்கை!!!_
ஆவின் பால் விற்பனையில் மீண்டும் முறைகேடு அரங்கேறியுள்ளது. தண்ணீர் கலந்து முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை, வேலூர் சாலையில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வதாக மேலாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ஓலைப்பாடி, கீரனூர், நச்சானஞ்சல், ராதாபுரம், மங்களம் ஆகிய கிராமங்களில் இருந்து பால் ஏற்றி வரும் ஊழியர்கள் வழியில் பாலை விற்பனை செய்தது தெரிய வந்தது.
மேலும் விற்பனை செய்யப்பட்ட பாலின் அளவை சரிசெய்ய தண்ணீர் கலந்துள்ளனர். ஆவின் பாலகத்தில் பரிசோதனை செய்யாமல் இருப்பதற்கு அங்கு பணியாற்றும் சேகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஷாம் ஆகிய மூன்று அலுவலர்களையும் கூட்டு சேர்த்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த மூன்று பணியாளர்களையும் தற்காலிக பணியிடைநீக்கம் செய்து மேலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த 6 பேர் மற்றும் அவற்றை வாங்கிய தனியார் பால் வியாபாரிகள் இரண்டு பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 7 வேன்கள், 50 பால் கேன்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று பல வருடங்களாக ஆவின் பாலில் தண்ணீர் கலந்து இவர்கள் விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.