
50 பேரப்பிள்ளைகள் இருந்தும் வறுமையில் வாடிய 105 வயது மூதாட்டிக்கு மளிகை பொருட்கள் தொகுப்பினை போலீசார் நிவாரணமாக வழங்கினர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 105) இவரது கணவர் தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். காசியம்மாளுக்கு மொத்தம் 50 பேரப்பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் யாரும் இவரை கவனிப்பதில்லை.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது மிகவும் வறுமையில் வாடியுள்ளார். இதனை அறிந்த ஆண்டிமடம் போலீசார் மற்றும் வணிகர்கள் நல சங்கம் சார்பாக வறுமையில் வாடிவந்த மூதாட்டிக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினை கொரோனா நிவாரண உதவியாக ஆண்டிமடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முகம்மது இத்ரீஸ் வழங்கினார். அப்போது காவல் உதவி ஆய்வாளர் திரு. மதன்குமார் அவர்கள் மற்றும் வணிகர்கள் நலசங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.