
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக இதுவரை 16,731 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.19 லட்சத்து 92 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்போது வாகனங்களில் செல்லுதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர், போலீசார், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோர் தொடர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டபோதும் பொதுவான விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல், இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மீறுதல், முககவசங்கள் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் தினமும் போலீசார் வழக்குகள் பதிவு செய்து வருகிறார்கள்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் வாகன சோதனை, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைகளில் விதிமீறல் தொடர்பாக இதுவரை மொத்தம் 16,731 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 16,964 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்”
தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிகள் மீறல் தொடர்பாக 5,853 இருசக்கர வாகனங்கள், 83 ஆட்டோக்கள், 126 கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் என மொத்தம் 6,062 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இதுவரை ரூ.19 லட்சத்து 92 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.