
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.V.வரதராஜு, இ.கா.ப., அவர்கள் இன்று பணிநிறைவு செய்துள்ளார்கள். 1991-ம் ஆண்டுகாவல் துறையில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்து சிதம்பரம் உட்கோட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் மாண்புமிகு முதல்வர் பாதுகாப்பு பிரிவிலும்(1994-96), தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளராகவும், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 1998-ஆம் ஆண்டில் புலனாய்வு பிரிவிலும் பணியாற்றினார். 2000-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்ட காரணத்தினால், 2000-ம் ஆண்டில் இவருக்கு உத்தமர் காந்தி விருது அரசால் வழங்கப்பட்டது. பதவி உயார்வு பெற்று மதுரை மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை மாநகர காவல்துறையில் வண்ணாரப்பேட்டை, அடையாறு, நுண்ணறிவுப் பிரிவு, புனித செயின்ட் தாமஸ் மவுண்ட் மாவட்டங்களில் துணை ஆணையாளராக பணிபுரிந்தார்கள். அப்போது சென்னை பெசன்ட் நகரில், ஸ்டேட் வங்கியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் மிகவும் சாதுரியமாக துப்பு துலக்கினார். 2003 முதல் 2005 வரைதிருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் போது வட இந்திய பவாரியா கொள்ளையர்களை கண்டுபிடித்து கொடுங்குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2011 முதல் 2012 வரை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவராக பணியாற்றிய போது கூடன்குளம் போராட்டத்தினை திறம்படகையாண்டு கூடன்குளம் பகுதியில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டியதை பாராட்டி 2012-ல் இவருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத் தகுந்தபணிக்கான விருது வழங்கப்பட்டது. சென்னை மாநகரில் நுண்ணறிவுப் பிரிவில் இணைஆணையர், கூடுதல் ஆணையர் என 4 ஆண்டுகள் பணியாற்றி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆக 2016-ல் பொறுப்பேற்று பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் ஹைட்ரோகார்பன் எதிரான போராட்டங்கள், விநாயகர் ஊர்வலங்கள், வேதாரண்யம், பொன்பரப்பி ,பொன்னமராவதி பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களை சாதுரியமாக கையாண்டு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து குடியுரிமை சட்டத்திற்கெதிரான போராட்டங்கள், வைகுண்ட ஏகாதசி திருவிழா, கொரோனா தடுப்பு பணிகள் அனைத்திலும் முனைப்புடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார். இன்று 30.6.2020 இந்திய காவல் பணியில் இருந்து பணிநிறைவு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.