

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான்– செல்வியின் தம்பதியரின் 7வயது மகள், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார். அருகே உறவினர்கள் வீட்டிற்குச் சென்று இருப்பார் வந்துவிடுவார் என்று பெற்றோர்கள் நினைத்திருந்த நிலையில், இரவு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடுகள், பொது இடங்கள் எனப் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து ஏம்பல் போலீஸாரிடம் சிறுமியைக் காணவில்லை எனப் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து சிறுமியைத் தேடிவந்தனர். இந்த நிலையில்தான், அவர்களின் வீட்டிற்கு அருகே உள்ள கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய்க் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமி சடலமாகக் கிடந்தார். சிறுமியின் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. இதையடுத்து, சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்திருப்பாரோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை நடத்தினர். மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் சம்பவ இடத்திற்குச் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் தான், ஏம்பல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(29) என்பவனை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அவனிடம் நடத்திய விசாரணையில், சிறுமியைத் தானே பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷ் எனும் அந்த கொடுக்குரனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் ராஜேஷ் என்கின்ற பூக்கடை வைத்திருக்கும் காமுகனுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள்அவனை தூக்கிலிட வலியுறுத்தி கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர்..