
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் ஓய்வு பெற்ற காவல் தலைவர் ஏ.ஜி. பொன்மாணிக்கவேல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல் துறைத் தலைவராக இருந்த பொன்மாணிக்கவேல் சில ஆண்டுகளாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றார். வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்ட ஏராளமான பழைமையான மிக விலை உயர்ந்த கோவில் சிலைகளைக் கண்டறிந்து மீட்டு வந்தார்.
இந்நிலையில், தஞ்சாவூருக்கு வந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் நலமாக உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.