
காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற கட்செவி (WhatsApp) எண்ணில் காணொளி மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று 03.07.2020 வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணிவரை மேற்கண்ட கட்செவி (WhatsApp) எண்ணில் காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார். காணொளி மூலம் மொத்தம் 34 நபர்கள் காவல் ஆணையாளரிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
புகார்கள் பொதுவாக கொடுக்கல் வாங்கல், திருட்டு, நிலஅபகரிப்பு, ஆன்லைன் மோசடி, காசோலை மோசடி, E-Pass, பொது ஊரடங்கு மற்றும் பொது தொல்லைகள் சம்பந்தமாக இருந்தது. மேற்படி புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.


