
லடாக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். கால்வன் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதல், அதைத் தொடர்ந்து அங்குள்ள களநிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
கிழக்கு லடாக்கில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் சீன வீரர்களின் அத்துமீறலால் மோதல் போக்கு ஏற்பட்டது. கடந்த ஜூன் 15ஆம் தேதி, கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில், அத்துமீறிய சீன வீரர்களை விரட்டியடிக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் நிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் இருதரப்பிலும் படை நடமாட்டம் காரணமாக தொடர்ந்து அசாதரண சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், திடீர் பயணமாக, இன்று காலை லடாக் சென்ற பிரதமர் மோடி, முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவானேவுடன் ஹெலிகாப்டர் மூலம், நிமு என்ற முன்தளப் பகுதிக்கு சென்றார். இந்த பகுதி, கடல்மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் ஜான்ஸ்கர் சரகத்தில் அமைந்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் அருகே அமைந்துள்ள பகுதி என்பதோடு, மிகவும் கரடுமுரடான நிலப்பரப்பு, மோசமான வானிலை நிலவும் பகுதியாகும்.
அங்கு, ராணுவ வீரர்கள், விமானப் படை வீரர்கள், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவானே மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர். கால்வன் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதல், அதைத் தொடர்ந்து அங்குள்ள களநிலவரம் குறித்தும் பிரதமர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
எல்லையை காத்து நிற்கும் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், எல்லைகள் மீது கண் வைக்கும் எதிரிகளை எச்சரிக்கும் வகையிலும் பிரதமர் மோடி இந்த பயணத்தை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்வன் தாக்குதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களையும் மோடி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

