
கொரனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆயுதப்படை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் நாகராஜன்(32). 2013ம் ஆண்டில் காவல்துறையில் பணிக்கு சேர்ந்த இவர் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். தற்போது அயல்பணியாக வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 3ம் தேதி கொரனா பரிசோதனை செய்து கொண்ட இவருக்கு நேற்று கொரானா தொற்று உறுதியானது. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் மருத்துவமுகாமில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
இதய பிரச்சனை, திடீர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை மோசமானதால், ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது .
மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் உதவி ஆய்வாளர் மணிமாறனை தொடர்ந்து சென்னையில் கொரானாவுக்கு பலியான காவல்துறையை சேர்ந்த 3 வது நபர் ஆயுதப்படை காவலர் நாகராஜன்(32)
சென்னை காவல்துறையில் சுமார் 1200 பேர் கொரனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 420 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.