
மதுரை :
ஊரடங்கு மீறி மதுரையில் வாகனத்தில் சென்றவர்கள் வாகனங்கள் பறிமுதல்.
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி மற்றும் மூன்று ஒன்றியங்களில் கடந்த 24-ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, ஜூலை 12-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள அதே நடைமுறைதான் என்றாலும்கூட, சென்னையைக் காட்டிலும் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது மதுரை. ஒரு புறம் தீவிர ஊரடங்கு, இன்னொரு புறம் வேகமான நோய்த்தொற்று என்று இரட்டை நெருக்கடி.
மதுரையில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி, அங்கே வந்தவர்களில் சந்தேகப்படும்படியான அறிகுறி இருந்தால்தான், கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படியிருந்தும் தினமும் 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. சென்னையுடன் ஒப்பிட்டால் மதுரையில் இறப்பு விகிதமும் அதிகமாகவே இருக்கிறது. மதுரையில் வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் மிகமிகக் குறைவு என்பதும், தொற்று முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதும் கவலை தரும் விஷயங்கள்.
இது ஒருபுறமிருக்க, முழு ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன. காய்கனி, மளிகை, இறைச்சிக் கடைகள் மட்டும் திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் செயல்படுகின்றன. ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், மதுரை மாநகர் பகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். இருந்தபோதிலும் மதுரை மாவட்டத்தில் குறிப்பாக மதுரை மாநகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் என்பது பெருமளவில் காணப்படுகிறது இதனை தடுப்பதற்காக இன்று காவல் துறை சார்பாக மதுரை நகர் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் காவல்துறையின் ஈடுபட்டனர் இதில் அனுமதி இன்றி சாலைகளில் வாகனத்தில் சென்றவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அவர்களுக்கு காவல் துறை சார்பாக அறிவுரையும் வழங்கப்பட்டது..
மதுரை மாவட்ட செய்தியாளர் காளமேகம்


