கான்புரில் எட்டு போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பலின் தலைவன் விகாஸ் துபே இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் விகாஸ் துபே தலைமையிலான ரவுடி கும்பலைப் பிடிக்கச்சென்ற 50 போலீசார் மீது ரவுடிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 போலீசார் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
விகாஸ் துபே மட்டும் சிக்காமல் பல்வேறு மாநிலங்களுக்குத் தப்பியோடினான்.
இந்நிலையில் நேற்று விகாஸ் துபேயை உஜ்ஜைனில் கைது செய்த மத்தியப் பிரதேச போலீசார் அவனை உத்தரப்பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கார் மூலம் அவனை போலீசார் கான்புருக்கு அழைத்து வந்தனர்.
இன்று அதிகாலை கான்புர் அருகே ரவுடி விகாஸ் துபேயை அழைத்து வந்த கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இதனை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிச் செல்ல முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இந்த மோதலில் விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டான்.
அவன் உடல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
காரில் இருந்த 4 போலீசார் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
.
