



தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (12.07.2020) ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி முதலில் இன்று (12.07.2020) காலை தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பில் ஆய்வு செய்தார். அப்போது ‘இன்று ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும்,
மேலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி நகரில் 35 இடங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் சுமார் 2000 போலீசார் இதுபோல் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று காவலர்களுக்கும் தினமும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும்100 சதவிகிதம் முகக் கவசம் அணிய வேண்டும், கையுறை அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றும் காவல்துறையில் கொரோனா வைரஸ் தொற்று எற்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.” என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி காவல்துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள், உதவி ஆய்வாளர்; திரு. சிவராஜா, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.