
தூத்துக்குடி மாவட்டம் :13.07.2020
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆந்திரா செல்வதற்கு இ.பாஸ் பெற்று வங்கி கணக்கு மற்றும் ரொக்கமாக ரூபாய் 3500/- வீதம் வாங்கிக்கொண்டு சென்னைக்கு ஆட்களை கொண்டு போய்விடும் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது, வாகனம் பறிமுதல் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை – விழிப்புடன் செயல்பட்ட போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
நேற்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று (12.07.2020) இரவு சுமார் 9 மணியளவில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் திருச்செந்தூர் முருகா மடம் சந்திப்பில் வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தபோது TN 09 AT 3505 இன்னோவா காரை சோதனை செய்ததில், மேற்படி வாகனம் மூலம் தலா ரூபாய் 3500/- பெற்றுக் கொண்டு 5 நபர்களை உடன்குடியிலிருந்து சென்னைக்கு இ.பாஸ் இல்லாமல் கொண்டுபோய் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு சென்னை செல்வதற்கு திருமணத்திற்காக ஆந்திரா செல்வதாக இ.பாஸ் வைத்துக்கொண்டு ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி வாகன ஓட்டுனர் திருச்செந்தூர், இடையன்விளை, தெற்கு தெருவைச் சேர்ந்த தேவ சுந்தரம் மகன் மனோகர் யுவராஜா (37), வாகனத்தின் உரிமையாளர் உடன்குடி சுல்தான்புரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ராமச்சந்திரன் என்ற சந்திரன் (42), உடன்குடி, சிறுநாடார் குடியிருப்பு, மேலத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தரலிங்கம்(40), மேற்படி நபர்களுக்கு ஆந்திரா இ.பாஸ் பெற்று தந்த உடன்குடியைச்சேர்ந்த கணபதி மகன் ரவிச்சந்திரன் ஆகியோர்களை கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய மேற்படி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் லாக் டவுன் கடுமையாக உள்ள இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களை இவ்வாறு அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விழிப்புடன் செயல்பட்ட திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசாரை பாராட்டினார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

