
கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 காவல்துறையினருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து 7 காவலர்களும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்
அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 காவலர்களுக்கு கொரொனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து, 7 காவலர்களும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மதுக்கரை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மதுக்கரை காவல் நிலையம் அருகில் இருக்கக்கூடிய திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஏற்கனவே சூலூர், துடியலூர், போத்தனூர் ஆகிய காவல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் நான்காவது காவல் நிலையமாக மதுக்கரை காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவல் துறையினருக்கு அடுத்தடுத்து தொற்று பரவி வருவதன் காரணமாக காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.