கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பாராட்டு!
தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆடும் கொரோனா தொற்றை தடுக்க மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதார பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இதன் விளைவாக இவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய பொன்னேரி காவல்நிலைய ஆய்வாளர், பொன்னேரி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்,கும்மிடிபூண்டி சிப்காட் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட ஒன்பது பேர் கொரோனா தடுப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் வீடு திரும்பினர்.இதையடுத்து பணிக்கு திரும்பினர்.இவர்கள் அனைவருக்கும் இன்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் கொரோனாவிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய ஒன்பது பேருக்கும் மலர்கொத்து அளித்து வரவேற்றார். அவர்களது சிறப்பான பணியையும் மன உறுதியையும், அர்பணிப்பு உணர்வையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.