
புதிய மாவட்டமான மயிலாடுதுறையில் சட்டம் ஒழுங்கிற்கு முன்னுரிமை! – மாவட்டத்தின் முதல் எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீநாதா ஐபிஎஸ் அறிவிப்பு…
புதிதாக உருவாக்கப்பட்ட தமிழகத்தின் 38வது மாவட்டமான மயிலாடுதுறைக்கு சிறப்பு அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நியமித்து கடந்த 12ம் தேதி உத்தரவிட்டது… இதனை தொடர்ந்து திருமதி.லலிதா ஐஏஎஸ் மாவட்டத்தின் சிறப்பு அதிகாரியாகவும், திரு.ஸ்ரீநாதா ஐபிஎஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், திரு.ஸ்ரீநாதா ஐபிஎஸ் மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். மயிலாடுதுறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, எந்த பிரச்சனைகள் குறித்தும் தன்னை நேரில் சந்திக்கலாம் அல்லது செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியதோடு தன்னுடைய செல்போன் எண்ணையும் மக்கள் பயன்பாட்டிற்காக அளித்தார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவேன். அரசு காட்டியுள்ள வழிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்தால் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்றார்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்,
சுபாஷ்சந்திரபோஸ்