
தூத்துக்குடி மாவட்டம் : 19.07.2020
கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் கடற்கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில் ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும் கடற்கரையோரங்களில் ஆண்டுதோறும் ஆடி, அமாவசை நாளில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 144 (CRPC)ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருவதாலும், ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் ஏற்பட அபாயம் இருப்பதாலும் பொதுமக்கள் நலன் கருதி 20.07.2020 ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் சடங்கு, சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றங்கரையோர இடங்களில் ஒன்று கூடுவதையும், ஆற்றில் நீராடுவதையும் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுத்து வரும் இது போன்ற நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.