ஆடி அமாவாசை நாளான இன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு சடங்கு சம்பிரதாயம் செய்வதற்காக அதிகம் கூடும் இடமான தூத்துக்குடி தெர்மல் நகர், புதிய துறைமுகம் கடற்கரை, தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறை பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆண்டுதோறும் ஆடி, அமாவசை நாளில் ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும் கடற்கரையோரங்களில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும் ஊரடங்கு அமலில் உள்ளதாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளான இன்று சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும் கடற்கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேற்று அறிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று (20.07.2020) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி தெரமல் நகர், புதிய துறைமுகம் கடற்கரை, முறப்பநாடு தாமிரபரணி படித்துறை பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

