
சாத்தான்குளம் விவகாரம் : கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளைத் திறந்து இருந்ததாக கடந்த மாதம் 19ஆம் தேதி காவல்துறையினரால் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில்பட்டி கிளை சிறையில் 20 ஆம் தேதி மதியம் அடைத்தனர்.
தந்தை. மகன் இருவரும் அடுத்தடுத்து கோவில்பட்டி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது வழக்கை சிபிஐ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே காவலர்கள் 5 பேரை காவலில் எடுத்து விசாரணை செய்த நிலையில் இன்று ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு இறுதியாக சிகிச்சை அளிக்கப்பட்ட கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 2 சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதலில் சிறையில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் வெங்கடேஷிடம் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர் பாலசுப்பிரமணியத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையெடுத்து அன்று பணியில் இருந்த செவிலியர்கள் கண்ணகி, புகழ்வாசுகி, மீனா, மகேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3மணி நேரம் விசாரணயை முடித்துக் கொண்டு 2 சிபிஐ அதிகாரிகளும் மதுரைக்கு கிளம்பி சென்றனர்.
