போலீஸார் தாக்கியதால் மனமுடைந்து தென்காசி மீன் வியாபாரி தற்கொலையா?- ஆலங்குளம் டிஎஸ்பி விசாரிக்க உத்தரவு

204

போலீஸார் தாக்கியதால் மனமுடைந்து தென்காசி மீன் வியாபாரி தற்கொலையா?- ஆலங்குளம் டிஎஸ்பி விசாரிக்க உத்தரவு

போலீஸார் தாக்கியதால் மனமுடைந்து மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணையை ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்தவர் ஜமுனாபாய், இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்:-

எனது கணவர் அருண்குமார் மீன் வியாபாரம் செய்து வந்தார். மே 21-ம் தேதி இரவில் வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த என் கணவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், வீடு திரும்பிய கணவர், இரு சக்கர வாகனத்தை மறுநாள் வந்து வாங்கிச் செல்லுமாறு உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் கூறியதாக தெரிவித்தார்.

மறுநாள் இருச்சக்கர வாகனத்தை வாங்கி வருவதாகக் கூறிக்கொண்டு பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவில் காவல் நிலையம் சென்றபோது என் கணவர் அரை நிர்வாணக் கோலத்தில் இருந்தார். போலீஸார் தாக்கியதில் அவருக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அவரை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

இந்நிலையில் குரும்பலாப்பேரி சுடுகாட்டுப் பகுதியில் மே 23-ல் என் கணவர் விஷம் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

போலீஸார் கடுமையாக தாக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக என் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், மது போதையில் என் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, என் கணவர் மரணம் தொடர்பாக மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரித்து, மனுதாரர் கணவர் இறப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை ஆலங்குளம் டிஎஸ்பிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here