
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த இரு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று. காவலர்களிடம் அவசரமாக முடிக்கப்பட்ட விசாரணை. 3பேருக்கும் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.
சாத்தான்குளம் கொலை வழக்கில் ஏற்கனவே சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர் , உள்ளிட்ட 5போலிஸ் கைதிகளையும் 3நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில் கொலை வழக்கில் இரண்டாம் கட்டமாக கைதுசெய்யப்பட்ட 3போலிஸ் கைதிகளான செல்லதுரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை 23ஆம் தேதிவரை சிபிஐ காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் 3காவலர்களையும் நேற்று சாத்தான்குளம் காவல் நிலையம், பென்னிக்ஸ் கடை அமைந்திருந்த பகுதி ஆகிய பகுதிகளுக்கு நேரில் அழைத்து சென்ற சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இரவில் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு 3பேரையும் அழைத்துவந்த நிலையில் சிபிஐ குழுவில் இடம்பெற்றிருந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று காலை வாக்குமூலங்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து 3பேரையும் மதுரை மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டதையடுத்து 3காவலர்களுக்கும் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 3பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே 3காவலர்களையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஒரு நாளுக்கு முன்பாகவே ஆஜர்படுத்தபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நேற்றைய தினம் சாத்தான்குளத்திற்கு 3பேரையும் அழைத்து சென்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பிற்கு சென்ற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது.
மேலும் சிபிஐ விசாரணையின்போது ஆஜரான காவலர்களுக்கும், பென்னிக்ஸ் குடும்பத்தினர், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றகூடிய காவலர்கள் உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகளோடு தொடர்பில் இருந்த பரிசோதனை நடத்தவாய்ப்பு உள்ளது. இதனையடுத்து வழக்கு தொடர்பாக சிபிஐ காவல்துறையினரின் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.