
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கடந்த 11 ந்தேதி துப்பாக்கி சூடு சம்பவம் விவகாரத்தில் தலைமறைவாகி பின்னர் 12 ந்தேதி சென்னை மேடவாக்கம் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி காயத்திரிதேவி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் திருப்போரூர் அருகே உள்ள கொட்டமேடு வன பகுதியில் மான்களை வேட்டையாடியதாக வந்த தகவலை அடுத்து அவரது வீடு மற்றும் குடோனில் இருந்து துப்பாக்கி மற்றும் ஏராளமான தோட்டாக்கள் மற்றும் தோட்டாக்களை செய்வதற்கான மூலப்பொருட்களை மாமல்லபுரம் ஏ.எஸ்.பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இதுவரை 4 முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது
அதன் அடிப்படையில் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரனை நடத்த நேற்று முன்தினம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் காவல்துறையினர் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் ஒரு நாள் மட்டுமே அனுமதியளித்து மாவட்ட முதன்மை அமர்வுப்நீதிமன்ற நீதிபதி காயத்திரிதேவி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இதயவர்மனிடம் விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகப்பிரியா தலைமையில் சம்பவம் நடைபெற்ற திருபோரூரில் உள்ள எம்.எல்.ஏவின் வீடு மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட குடோனில் நேரில் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது அவர் துப்பாக்கி எப்படி வந்தது? எதற்காக வாங்கினார்? முறையாண ஆவணங்கள் உள்ளனவா? மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றி இருபதால் இதுவரையில் எத்தனை மான்களை வேட்டையாடி உள்ளார் எனவும் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் விசாரணை முடிந்து நீதிமன்றத்துக்கு அழைத்துவந்து இதயவர்மனை ஆஜர்படுத்தினர். அத்துடன் விசாரணையின்போது கைபற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதயவர்மனுக்கு சிறையில் போதிய வசதிகள் இல்லை என கூறி அவருக்கு சிறையில் முதல் ரக தனி அறை கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி அவருக்கு தனி முதல்ரக அறை ஒதுக்க உத்தரவு பிறப்பித்தார். எனவே அவரை ஏற்கனவே உத்தரவிட்ட 15 நாட்கள் முடியாத நிலையில் மீண்டும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
