வாணியம்பாடியில் வியாபாரி மீது இரும்பு கம்பி மற்றும் உருட்டுக்கட்டையால் கொலைவெறி தாக்குதல். மணல் கொள்ளையர்கள் வெறிச்செயலா? நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

242

வாணியம்பாடி ஜூலை 22 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுஹேல் அஹமத் (வயது 40). இவர் கச்சேரி சாலையில் உள்ள டி.கே டேனரி பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிடங்கு அமைத்து ஆட்டு முடி வியாபாரம் மற்றும் மூன்று பசுக்களை வைத்து கொண்டு பால் வியாபாரமும் செய்து வருகிறார்.

பாலாற்று படுகையில் உள்ள தனியார் நில உரிமையாளர்கள் நிலங்களில் உள்ள மணலை, மணல் கொள்ளையர்களுக்கு விற்று வருவது தொடர் கதையாக உள்ளது. இவருடைய கிடங்கு அமைந்துள்ள இடத்தின் பக்கத்தில் ஒரு புரம் பாலாற்றின் படுகை, மறுபுறம் தனியார் தோல் தொழிற்சாலைக்கு சொந்தமான காலி இடம் (டி.கே.அதிகுர் ரஹமான் என்பருக்கு சொந்தமான இடம்) அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மணலை இடத்தின் உரிமையாளர் மணல் கொள்ளையர்களுக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் இரவு நேரங்களில் நடக்கும் மணல் கொள்ளை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வந்துள்ளதால் மணல் கொள்ளையர்கள் இவர் மீது கடுப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று இரவு 7.30 மணி வரை மேச்சலுக்கு சென்ற பசுக்கள் வரதாதல் அவர் அங்கே காத்திருந்த போது கிடங்கு அருகில் நின்று கொண்டு இருந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென பீர் பாட்டில், இரும்பு ராடு மற்றும் உருட்டுக்கட்டையால் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பியுள்ளனர். அதில் அவருக்கு தலை, கை மற்றும் முதுக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் வலி தாங்க முடியாமல் மரண குரல் எழுப்பி உள்ளார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச் சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைவெறி தாக்குதல் நடத்தி தப்பி ஓடிய 3 பேரை தேடி வருவதுடன், அப்பகுதி தொழிற்சாலைகளில் பொறுத்தப்பட்டுள்ள சிசி டிவி காட்சிகள் உதவியுடன் மணல் கொள்ளையர்கள் வெறிச்செயல் இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here