
சேலம் மாவட்ட ஓமலூர் அருகே சுங்கச்சாவடியில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓமலூர் அருகே சுங்கச்சாவடியில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டைக்கு கடத்தி சென்றபோது பிடிபட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், இந்த வழியாக அவ்வப்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறது. அவ்வப்போது போலீசாரும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரில் இருந்து ஓமலூர் வழியாக சேலத்திற்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மினி லாரியில் கடத்துவதாக சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் செந்திலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து கடத்தல் லாரியை பிடிக்குமாறு கருப்பூர் போலீசார் உத்தரவிட்டார். இதையடுத்து ஓமலூர் அருகே உள்ள தனியார் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மினி லாரியில் கொத்தமல்லி மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளுடன் மூட்டையாக 17 மூட்டைகளில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த 10 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் சட்டவிரோதமாக கடத்தி வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெங்களூரில் இருந்து தருமபுரிக்கு ஒரு வாகனத்தில் கொண்டுவந்த புகையிலை பொருட்களை, அங்கிருந்து ஒரு மினி லாரியில் கொத்தமல்லி மூடைகளுடன் சேர்ந்து ஏற்றியுள்ளனர். பின்னர் தருமபுரில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டைக்கு கொண்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து செவ்வாய்பேட்டை வியாபாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சேலம் அருயுள்ள இளம்பிள்ளையை சேர்ந்த ஓட்டுனர் வீரசப்தகிரி, எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த புரோக்கர் கணேஷ் ஆகியோரை கைது செய்தனர். கடத்தல் வாகனத்தை பிடித்த போலீசாரை துணை ஆணையர் செந்தில், உதவி ஆணையர் நாகராஜ் ஆகியோர் பாராட்டினர்.
சேலம் மாநகர செய்தியாளர்
என் என் முரளி ராஜ்