
திருச்சி: திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர்கள் 3 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்கள் சாலையில் வந்த லாரியை மடக்கி நிறுத்தினர். டிரைவர் கீழே இறங்கியதும், திடீரென 3 பேரும் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு அவரை விரட்டினர். தொடர்ச்சியாக அடுத்தடுத்து அந்த வழியாக சென்ற 5 லாரிகளை மடக்கி இதுபோல் பணம், செல்போன்களை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதில் சுதாரித்து கொண்ட மற்றொரு லாரி டிரைவர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே காந்தி மார்க்கெட், பொன்மலை போலீசார் மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் 5 லாரி டிரைவர்களை மிரட்டி வழிப்பறி நடந்த சம்பவம் காந்தி மார்க்கெட், பாலக்கரை, பொன்மலை ஆகிய 3 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருகிறது. ஆகையால் இந்த சம்பவம் குறித்து 3 போலீஸ் நிலைய போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.