தஞ்சையை சேர்ந்த வங்கி வாடிக்கையாளர்கள் 6 பேரிடம் ஏ.டி.எம். மூலம் நூதன முறையில் ரூ.2½ லட்சம் மோசடி – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

497

தஞ்சாவூர், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ரெயில் நகரை சேர்ந்தவர் அப்துல் முகமது அயூப் (வயது51). மரைன் என்ஜினீயரான அயூப் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக தஞ்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி இவருடைய வங்கிக்கணக்கில் இருந்து 4 தவணையாக ஒரே நாளில் ரூ.40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தஞ்சையில் உள்ள வங்கிக்கு சென்று தனது ஏ.டி.எம். கார்டு செயல்பாட்டை நிறுத்தி வைத்துள்ளார். இவரைப்போல தஞ்சையில் பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாலசுந்தரம் என்பவரது வங்கிக்கணக்கிலிருந்து கடந்த மாதம் 13-ந்தேதி ரூ.30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் கோவிந்தராஜ் என்பவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் மோசடி அனைத்தும் திருச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மற்றும் என்.ஆர்.ஐ. ஏ.டி.எம். ஆகியவற்றிலிருந்து நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதே போல் 6 பேரிடம் இருந்து ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ஒருவரது வங்கி கணக்கிலிருந்து வேறு யாராவது மோசடி செய்து பணம் எடுத்தால், அவருக்கு “ஒன் டைம் பாஸ்வேர்டு” என்ற நம்பர் வரும். ஆனால் இவர்களுக்கு அதுபோல நம்பர் எதுவும் வரவில்லை. அந்த அளவுக்கு தொழில்நுட்ப உதவியுடன் அந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய்யிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மோசடி செய்த கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here