
காஞ்சிபுரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் யாரோ தவறவிட்ட பணத்தை இளைஞர் ஒருவர் எடுத்து வந்து மாவட்ட எஸ்பியிடம் ஒப்படைத்தார். அவரை எஸ்பி பாராட்டினார். மேல்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் பிரபுதாஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கீழம்பி திருமலைபொறியியல் கல்லூரி அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வெளியில் வந்த நிலையில் இருந்தது. அதை எடுத்து வைத்துக் கொண்டு சுமார் 30 நிமிடம் அங்கேயே காத்திருந்தார். ஆனால், யாரும் பணத்தைத் தேடி வரவில்லை. எனவே, அவர் அந்தப் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியாவிடம் ஒப்படைத்தார். அவர் வங்கி மூலம் சரிபார்த்து அதை உரியவரிடம் ஒப்படைத்துவிடுவதாக உறுதியளித்தார். பணத்தை நேர்மையாக கொண்டு வந்து போலீஸில் ஒப்படைத்த பிரபுதாஸையும் அவர் பாராட்டினார்.