
முன்விரோதத்தில் கொலை – படகுகள் தீவைப்பு ..!

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 25க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
கடலூர் அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணியின் தம்பி மதிவாணன் ஆவார். மாசிலாமணிக்கும், தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள மதியழகன் தரப்பினருக்கும இடையே உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு கும்பல் மதிவாணனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

இதையடுதது கொலை செய்யப்பட்ட மதிவாணனின் ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை தீ வைத்து கொளுத்தினர். மேலும் எதிர் தரப்பினரின் வீடுகளில் இருந்த வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது மட்டுமின்றி ஒரு சில வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கடலூர் தேவனம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் மற்றும் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 30 பேரைப் பிடித்து விசாரணை நடத்தப்படுகிறது.