
சென்னை,பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர். பம்மல் சங்கர் நகர், 31- வது தெருவை சேர்ந்தவர் மலர்விழி (37). இவர், தனது வீட்டின் அருகே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில், மலர்விழி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை பறிக்க முயன்றனர். அதற்குள் சுதாரித்துக் கொண்ட மலர்விழி, செயினை கைகளால் இருக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால் கொள்ளையர்கள் வெறுங்கையுடன் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து அவர், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மலர்விழியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட அனகாபுத்தூர், எம்ஜிஆர் நகர் 3- வது தெருவை சேர்ந்த பிரேம்குமார் (20) மற்றும் அனகாபுத்துார், இராமலிங்கம் 2- வது தெருவை சேர்ந்த மூர்த்தி (19) ஆகிய இருவரை வீட்டில் பதுங்கியிருந்த போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களாக சங்கர் நகர் காவல் நிலையம் அருகிலேயே அதிகரித்து வரும் இது போன்ற வழிப்பறி கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி குற்றம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.