Home தமிழ்நாடு மூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த மேலும் 5 பேர் அடையாளம் தெரிந்தது – மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆறுதல்

மூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த மேலும் 5 பேர் அடையாளம் தெரிந்தது – மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆறுதல்

0
மூணாறு அருகே நிலச்சரிவு: கயத்தாறைச் சேர்ந்த மேலும் 5 பேர் அடையாளம் தெரிந்தது – மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆறுதல்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் மேலும் 5 பேர் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொக்லைன் மூலம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கேரள தீயணைப்புத் துறை, வனத்துறை, காவல் துறையினர் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று வரை நடைபெற்ற மீட்புப் பணியில், 43 பேர் மீட்கப்பட்டனர்.

ராஜமலை பெட்டிமுடி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 30 தொழிலாளர்களின் குடும்பங்கள் சிக்கின.

அதில் நேற்று வரை தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் 17 பேர் என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் 5 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர் என்பதை வட்டாட்சியர் பாஸ்கரன் உறுதி செய்தார்.

இதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரில் 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிக்கியுள்ளோரின் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், கயத்தாறைச் சேர்ந்த மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருப்பார்களா என்ற அச்சம் கயத்தாறு பாரதி நகர் மக்களிடையே நிலவி வருகிறது. கேரள மாநில அரசு மீட்புப் பணியை தீவிரப்படுத்தி விரைவில் அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆறுதல்:

கயத்தாறு பாரதி நகர் பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் இன்று சென்றார். பின்னர், இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கலைகதிரவன், ஆய்வாளர் முத்து ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here