புதுக்கோட்டை, விராலிமலை அருகே பாட்னாபட்டியை சேர்ந்தவர் குஞ்சான்; மனைவி பிச்சையம்மாள், 60. இவர்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு முன், இரண்டு ஆண், இரண்டு பெண் என, நான்கு குழந்தைகள் இருந்த நிலையில், ஐந்தாவதாக பெண் குழந்தை பிறந்தது.அப்போது, ஏழ்மையில் இருந்த தம்பதி, ஐந்தாவதாக பிறந்த பெண் குழந்தையை தத்து கொடுக்க நினைத்தனர்.
இதையறிந்த, தனியார் பஸ் கண்டக்டரான, புதுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன், 60, என்பவர், குழந்தையை தத்தெடுத்து, துர்காதேவி என பெயரிட்டு வளர்த்து வந்தார்.துர்காதேவி, தற்போது, எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக, சுப்பிரமணியின் மனைவி சரோஜா, 70, நான்கு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். மனைவி இறந்த சோகத்தில் சுப்பிரமணியனும், கடந்த மாதம் இறந்து விட்டார்.நிர்கதியாக இருந்த துர்காதேவிக்கு, பக்கத்து வீட்டில் வசித்த, புதுக்கோட்டை எஸ்.பி., அலுவலக எஸ்.ஐ., லலிதா பிரியதர்ஷினி உதவி செய்ய முன்வந்தார். துர்காதேவியின் பிறப்பு சான்றிதழை பார்த்தபோது, அவர், மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்தது தெரிந்தது
.விராலிமலை போலீசார் உதவியுடன், மணப்பாறை அரசு மருத்துவமனையில் விசாரித்த போது, குஞ்சான் – பிச்சையம்மாள் தம்பதியின் மகள் என்பது தெரிந்தது. குஞ்சான் இறந்து விட்டதும், பிச்சையம்மாள் அதே ஊரில் வசித்ததும் தெரிந்தது.
இதையடுத்து, துர்காதேவியை, நேற்று முன்தினம், பிச்சையம்மாளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மகளை பார்த்த தாயும், பெற்ற தாயை பார்த்த மகளும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.’துர்காதேவியை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம்’ என, அவரது தாயும், சகோதரர்களும் போலீசாரிடம் உறுதி அளித்து, அவர்களுக்கு நன்றி கூறினர்.