நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொலை – மறைந்த காவலருக்கு டிஜிபி திரிபாதி அஞ்சலி

255

“இதுபோன்ற ஒருசில சம்பவங்களால் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்ததாக அர்த்தமில்லை” – என பேட்டி

தென்மாவட்டத்தில் உள்ள 480 காவல் நிலையங்களிலும் காவலர் சுப்ரமணியன் படத்திற்க்கு அஞ்சலி

தூத்துக்குடியில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர் நேற்று மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர். அப்போது, காவல்துறையினர் வருகையை அறிந்த துரை முத்து மற்றும் அவரது சகோதரன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் மீது வீசியுள்ளார்.

இதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு.சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் புகைப்படத்திற்கு நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் தமிழக டிஜிபி திரிபாதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி திரிபாதி: –

“காவலர்கள் இறந்தால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் எதுவுமில்லை. வழக்குகள், சம்பவங்களின் வேறுபாடு அடிப்படையில் காவலர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாமல் இல்லை. இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நடைபெற்றது. அதனால் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூற முடியாது.
இதுபோன்ற ஒருசில சம்பவங்களால் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்ததாக அர்த்தமில்லை. எங்கள் குடும்பத்தில் இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெற்று விட்டது. போலீசார் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். நாம் நமது வேலையை செய்வோம்.

போலீசாருக்கு தகுந்த பாதுகாப்பு இருக்கிறது. இன்னும் பாதுகாப்பு பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும். மேலும், காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டது குறித்து வழக்கு விசாரணையில் பாரபட்சம் எதுவும் காட்டப்படுவது இல்லை. காவலரை புதுவகையான குண்டு வீசி கொன்றனரா என பிரேத பரிசோதனையில் தெரியும். ஆணிகள் வைக்கப்பட்ட வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதா என்று பரிசோதனையில் தெரியவரும், என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பலியான காவலர் சுப்பிரமணியனுக்கு தென்மாவட்டத்தில் உள்ள 480 காவல் நிலையங்களில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here