
சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் துரை (40). இவர் இந்து முன்னணி ஒன்றிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இன்று காலை இவரது வீட்டின் அருகே நூல் சுற்றிய நிலையில் நாட்டு வெடிகுண்டு போன்ற உருண்டையான மர்ம பொருள் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமார், ஆய்வாளர் பெர்னாட் சேவியர் மற்றும் போலீசார் சம்ப இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த மர்ம பொருளை கைப்பற்றி மணல் வாளியில் போட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இருந்து மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பொருளை பரிசோதித்தனர்.
அப்போது அந்த பொருள் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பிரித்து பார்த்த போது தேங்காயில் நூலை சுற்றி வைத்திருந்தது தெரியவந்தது. துரையை பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கில் யாராவது இவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விரைந்து நேரில் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் ஆய்வு செய்த எஸ்பி ஜெயக்குமார் பின்னர் தூத்துக்குடி கிளம்பிச் சென்றார். இந்த சம்பவத்தால் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.