
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இந்திரா நினைவு வீடு வழங்கும் திட்டத்தில் 3 வீடுகள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதால், திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடி ஊராட்சியில் கடந்த 3 வருடத்திற்கு முன்பு ஐஏஒய் (இந்திரா நினைவு) வீடு கட்டும் திட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் நெறிஞ்சிக்குடியில் சோலையம்மாள், மல்லிகா, வௌ்ளகுடியில் மஜீத் என்ற பெயர்களில் ஐஏஒய் திட்டத்தில் 3 பேருக்கு வீடுகள் கட்ட திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் அனுமதி வழங்கிய முகவரியில் வீடுகள் கட்டப்படவில்லை.
அதாவது வௌ்ளகுடி மஜீத் பெயரில் ஒதுக்கிய வீட்டை சித்ரா என்பவர் வீடு கட்டி பணம் எடுத்துள்ளனர். நெறிஞ்சிக்குடியில் சோலையம்மாள் என்ற பெயரில் கோயில் வீடு கட்டியுள்ளனர். அதுவும் முழுமையாக கட்டப்படவில்லை. ஆனால் பணம் எடுத்துள்ளனர். மற்றொரு வீடான மல்லிகா பெயரில் கட்டிய வீட்டிற்கு ரூ.42 ஆயிரம் பணம் வழங்கியுள்ளனர். ஆனால் மல்லிகாவுக்கு மீதி பணம் வழங்கவில்லையாம். அவரே சொந்த பணத்தில் வீடு கட்டியுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடந்த ஆண்டு புகார் செய்ததன் அடிப்படையில், திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினர் ஊராட்சி செயலர் பழனியப்பன் என்பவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். மேலும் யூனியன் அலுவலகத்திலும் யூனியன் பொறியியல் பிரிவு அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அரசு வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வந்த விசாரணை நடத்தியதால் பொன்னமராவதில் பெரும் பரபரப்பு நிலவியது.