
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 15ம் தேதி கந்த சஷ்டி திருவிழா துவங்கி வரும் 26ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 20ம் தேதி நடக்கிறது. தற்போது கரோனா நோய் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் நவ 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் தளர்வுகளுக்குட்பட்டு கந்த சஷ்டி விழாவை நடத்துவது தொடர்பாக கடந்த இரு நாட்களாக அறநிலையத்துறை அதிகாரிகளோடு ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவர் கோயிலில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் வரும் 15ம் தேதி கந்த சஷ்டி திருவிழா துவங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. இதில் முக்கிய திருவிழாவான சூரசம்ஹாரம் வரும் 20ம் தேதி நடக்கிறது. தற்போது கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கந்த சஷ்டி விழாவில் தேவையான அடிப்படை வசதிகள், எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது, பக்தர்கள் வருவது அமரவைப்பது, போலீஸ் பாதுகாப்பு பணி, சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்களை தரிசனத்திற்கு செல்வது ஆகியவை குறித்து ஆய்வு செய்தோம். இது தொடர்பாக வரும் 5ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அன்றையதினம் பக்தர்கள் அனுமதி தொடர்பான அறிவிப்பு செய்யப்படும் என்றார்.
முன்னதாக கோயில் கலையரங்கம், கிரி பிரகாரம், சண்முகவிலாசம் முகப்பு பகுதி, கடற்கரை ஆகிய பகுதிகளில் ஆய்வு நடந்தது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரிதிவிராஜ், திருச்செந்தூர் போலீஸ் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங், கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் செல்வராஜ், கோயில் ஜூனியர் இன்ஜினியர் சந்தாண கிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், உள்துறை சூப்பிரெண்ட் ராஜ்மோகன், மாரிமுத்து, ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
