

மதுரை அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ கலியுக மெய்ய அய்யனார் கோவிலில் கார்த்திகை மாத உற்சவ விழா 15 ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 ம் நாளான இன்று (17 ம்தேதி) வடமஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 25 அடி நீளமுள்ள வைக்கோல் வடத்தின் நுனி பகுதியில் உள்ள கயிற்றை காளையின் கழுத்தில் அணிவித்த இளைஞர்கள் சின்ன சங்கையா கோவில் அருகிலிருந்து பெரிய சங்கையா கோவில் மைதானம் வரை அழைத்து வந்து ஆரவாரம் செய்தனர். இதில் கிராமத்தின் 14 மரியாதை காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு காளைகளும் 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை விளையாடின. இதில் இளைஞர்கள் காளையை அடக்குவதற்கு அனுமதியில்லை. இருப்பினும் அதிகளவில் இளைஞர்கள் பங்கேற்று காளையின் வீரத்தை உசுப்பேற்றி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உட்பட பார்வையாளர்கள் சுமார் 1000 கலந்து கொண்டனர். மேலும் அனுமதியின்றி கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி முக்கவசம் அணியாமல் அதிகளவில் பொதுமக்களை ஒன்று கூட்டி வடமஞ்சுவிரட்டு நடத்தியதால் அலங்காநல்லூர் போலீசார் விழாகுழுவினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்