உத்தர பிரதேசத்தில் போலீஸ் டி.எஸ்.பி., யாக பதவி ஏற்க உள்ள மகள், சீருடையுடன் ‘சல்யூட்’ அடித்ததை, போலீஸ் டி.ஐ.ஜி.,யாக பதவி வகிக்கும் அவரது தந்தை ஏற்றுக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில் உள்ள அம்பேத்கர் போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த டி.எஸ்.பி., க்கள் நேற்று முன்தினம் அணிவகுப்பில் பங்கேற்றனர். அதில், இளம்பெண் அபேக் ஷா என்பவரும் பங்கேற்றார்.
விரைவில் அவர் உத்தர பிரதேசத்தில் போலீஸ் டி.எஸ்.பி.,யாக பதவியேற்க உள்ளார். அணிவகுப்பை பார்வையிட, அபேக் ஷா உட்பட பயிற்சி முடித்த பலரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அபேக் ஷாவின் தந்தை, நிம்பாடியா ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படையின் டி.ஐ.ஜி.,யாக உள்ளார். சீருடையுடன் மைதானம் வந்த அவருக்கு, அணிவகுப்பை முடித்த மகள் அபேக் ஷா, சீருடையில் வந்து மகிழ்ச்சியும், பெருமையும் பொங்க சல்யூட் அடித்தார்.
தந்தையும் அதை ஏற்றுக்கொள்வதாக பதில் சல்யூட் அடித்தார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஐ.டி.பி.பி., நேற்று பகிர்ந்து உள்ளது. ‘பெருமைமிக்க தந்தை, பெருமைக்குரிய மகளிடம் இருந்து சல்யூட் பெறுகிறார்’ என அதில் கூறப்பட்டுள்ளது. இதை ரசித்த பலரும் அவர்களை பாராட்டி வருகின்றனர். நல்வாழ்த்துக்கள்.