
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவரது மகன்கள் விக்னேஷ்(23), யோகேஷ்(23), திருவேற்காட்டை சேர்ந்த கோதண்டம் மகன் ஹரீஷ்(23) மற்றும் காரைக்காலை சேர்ந்த செல்லய்யா மகன் கணேஷ்(21)ஆகிய நான்குபேரும் கல்லூரி நண்பர்கள் ஆவர்.இவர்கள் நான்கு பேரும் நேற்று இரவு புறப்பட்டு சென்னை – பழனி இரயிலில் பழனிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் நால்வரும் இன்று காலை பழனிஅருகே உள்ள வரதமாநதி அணையை சுற்றிப்பார்க்க சென்றதாக தெரிகிறது.அங்கு அணையில் இறங்கி நீரில் குளித்துள்ளனர். அப்போது ஒருவர் நீரில் மூழ்கியதாகவும், அவரை காப்பாற்ற மற்றவர்கள் முயன்றபோது ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து சுதாரித்து கொண்ட ஹரிஷ் என்பவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீர்மூழ்கியவர்களை தேடியபோது மூவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த விக்னேஷ்,யோகேஷ் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த கணேஷ் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து சென்னையை சேர்ந்த மற்றொரு நண்பரான ஹரிஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உயிரிழந்த விக்னேஷ் மற்றும் யோகேஷ் இருவரும் இரட்டையர் என்பது குறிப்பிடத்தக்கது