
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் விமலா(32). தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஆக பணிபுரிந்து வருகிறார். பொங்கல் தினத்தன்று ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியை சந்திப்பதற்காக சாதாரண உடையில் பைக்கில் சென்றுள்ளார். சகோதரியை சந்தித்துவிட்டு திரும்ப சுரண்டை செல்லும் பொழுது நெட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே வழியை மறித்துக் கொண்டு சிலர் நின்றுள்ளனர். வழி விடுமாறு கூறிய விமலாவை மது போதையில் இருந்த அந்த நபர்கள் கடுமையாக தாக்கியதுடன் அவரின் ஆடையையும் கிழிக்க முற்பட்டுள்ளனர்.
இதில் காயம் அடைந்த விமலா அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று பின்னர் ஆலங்குளம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆலங்குளம் போலீசார், நெட்டூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(27), மாரியப்பன்(20), கண்ணன்(25) மற்றும் முருகன்(35) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வேல்முருகன் என்பவர் ஆலங்குளம் அருகேயுள்ள உடையாம்புளியில் பதுங்கி இருந்தார். அவரைக் கைது செய்ய சென்ற ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரனை வேல்முருகன் கையில் கடித்து தப்ப முயன்றுள்ளார். அதனைத் தடுக்க முயன்ற உதவி காவல் ஆய்வாளர் தினேஷ் பாபுவை பலமாக தாக்கியதில் இருவரும் காயமடைந்த நிலையிலும் வேல்முருகனைக் கைது செய்தனர். வேல் முருகனை பிடிக்க முயன்ற ஆலங்குளம் உதவி ஆய்வாளர் தினேஷ்பாபுவின் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் முருகன் என்பவரும் கைது செய்யப் பட்டார். மேலும் கண்ணன், மாரியப்பனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இன்று கைது செய்யப்பட்ட முருகனை ஆலங்குளம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட வேல்முருகன் மற்றும் முருகன் ஆகிய இருவர் மீதும் மூன்றுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.