நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீட்டிப்பு!
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை நீட்டித்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி ரூயாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடினார். இதனிடையே தலைமறைவாக இருந்த அவர்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி லண்டனில் கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.நீரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியன தீவிரமாக மேற்கொண்டுள்ளன.
மேலும் நீரவ் மோடியின் சொத்துக்களை முடக்கி இந்தியா கொண்டுவரும் பணிகளும் மறுபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நீரவ் மோடி மீதான வழக்கை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடி, 28 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார். அதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீரவ் மோடி இன்று தேதி ஆஜா்படுத்தப்பட்டார்.
காணொலி காட்சி முறையில் நடைபெற்ற விசாரணையில், நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதனிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை, வரும் செப்டம்பா் மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..