வங்காளதேசத்தில் பரிசோதனை செய்யாமலே 6 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா இல்லை என சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனரை இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தபோது போலீசார் கைது செய்தனர்.

856

பரிசோதனை செய்யாமலே 6 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனர்

வங்காளதேசத்தில் பரிசோதனை செய்யாமலே 6 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா இல்லை என சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனரை இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தபோது போலீசார் கைது செய்தனர்.

டாக்கா: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் வங்களதேசத்திலும் பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் மிக அதிகம் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா பரிசோதனைகள் மிகக்குறைவாக செய்யப்படுவதாகவும், பல உயிரிழப்புகள் கணக்கில் வராமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் பரிசோதனைகள் சரிவர செய்யப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் பிரபல மருத்துவமனை இயக்குனர் கொரோனா பரிசோதனை செய்யாமலேயே 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு போலியாக கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதல் கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையின் இயக்குனர் முகமது ஷஹீத்(42). இவர் தனது மருத்துவமனையில் இலவசமாக
கொரோனா பரிசோதனை செய்வதாக அந்நாட்டு அரசிடம் கணக்குகளை காண்பித்து வந்துள்ளார்.

ஆனால், அவர் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பரிசோதனை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு கொரோனா இல்லை என போலியாக சான்றிதல் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து முகமது ஷஹீத்தின் மருத்துவமனையில் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் முகமதுவின் மருத்துவமனையில் 10 ஆயிரத்து 500 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியது.

ஆனால் அதில் 4 ஆயிரத்து 200 கொரோனா பரிசோதனைகள் மட்டுமே உண்மையாக நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதும் எஞ்சிய 6 ஆயிரத்து 300 சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டதும் தெரியவந்தது.

பணத்திற்காக கொரோனா பரிசோதனை செய்யாமலேயே 6 ஆயிரத்து 300 பேருக்கு போலியாக கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் அளித்ததும் தெரியவந்தது.

இதனால், கொரோனா பரிசோதனை குறித்து போலியாக சான்றிதழ்களை விநியோகம் செய்த முகமதுவை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு போலீசார் இறங்கினர். ஆனால் மருத்துவமனை தலைவரான முகமது தலைமறைவானார்.

இந்நிலையில், 9 நாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின் இந்தியா-வங்காளதேசத்தை இணைக்கும் எல்லையோர ஆற்றின் அருகே மறைந்திருந்த முகமதுவை அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்படுவோம் என நினைத்த முகமது எல்லையோர ஆற்றின் வழியாக இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட முகமதுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள்
தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யாமலே வைரஸ் இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்த பல டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கைது வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் குறித்த உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here