மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் சார்பில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நெற்றியில் விபூதி, குங்குமப் பொட்டு வைத்து அவமதிக்கப்பட்ட புகைப்படம் முகநூலில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் யுவப்பிரியா, சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரியார் சிலையை சுத்தப்படுத்தி மாலை அணிவித்தனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட தகவல் அறிந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் தலைமையில் சிலை முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் இட்ட நபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து அவர்கள் புகார் அளித்தனர். போலீசாரும் பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று சீர்காழி அருகே பழையபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொடக்காரமூளை கிராமத்தை சேர்ந்த விவசாயி மனோகரன் (வயது52) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், அரசு பட்டா பெற தன்னை அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்ததாகவும் இதனால் மனமுடைந்து , பெரியாரை கடவுளாக நினைத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து விபூதி மற்றும் குங்குமம் வைத்தேன் என கூறினார்.
இதையடுத்து சீர்காழி போலீசார் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை செய்தியாளர்,
சுபாஷ்சந்திரபோஸ்