வேலூர் காட்பாடியை அடுத்துள்ள தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற தேவராஜ். தேவாமீது கொலை மிரட்டல், கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்தல், பணமோசடி, வழிப்பறி உட்பட
25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாக விவரிக்கிறது வேலூர் காவல்துறை. நீண்ட தாடி, கூந்தல் பின்னும் அளவுக்கு தலைமுடியுடன் தோற்றமளிக்கும் தேவா, கூலிங் கிளாஸ் அணிந்துக்கொண்டு சொகுசு காரில்தான் வலம் வருவாராம். தென் மாவட்டங்களில் ஓரளவு வாக்கு வங்கியுடைய ஒரு சிறிய கட்சியில் வேலூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு தேவாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது
2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம், வேலூரிலுள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்துக்குள் தேவா தலைமையிலான ரௌடி கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. அப்போது, தேவாவை கைது செய்த போலீஸார் அவரது காரிலிருந்து கைத்துப்பாக்கி, கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை கைப்பற்றினர். சிறையிலிருந்து ஜாமீனில் வந்த தேவா 2020 மே மாதம், சட்ட விரோதமாக கைத்துப்பாக்கியை விற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டார். சில நாள்கள் சிறையில் இருந்துவிட்டு மறுபடியும் ஜாமீனில் வந்த தேவாவின் ஆட்டம் அடங்கவில்லை.
வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகவும், வேலையில் சேர்த்துவிடுவதாகவும் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டாராம். இதுதொடர்பான புகாரிலும் கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்ட தேவா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், சிறையிலிருந்து வெளியில் வந்த தேவா கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த மாதம் வழிப்பறி வழக்கில் தேவாவை காட்பாடி போலீஸார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இந்தநிலையில், தேவாவின் சிறைக்காவலை நீட்டித்து அவர்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு எஸ்.பி செல்வகுமார் பரிந்துரைச் செய்திருந்தார். அதன்படி, தேவாவை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிறையிலுள்ள தேவாவிடம் அதற்கான நகலைப் போலீஸார் வழங்கினர்.