திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த ஜூலை 26ம் தேதி கஞ்சா வியாபாரி தில் இந்தியாஸ் என்பவருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 10 பட்டா கத்திகள், 8 கிலோ கஞ்சா, 10 செல்போன்களை பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தலைமறைவாக இருந்து வரும் தில் இந்தியாஸ் உட்பட 2 பேர் சேர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி வசிம் அக்ரமை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
கஞ்சா விற்பனை குறித்து வசிம் அக்ரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் காரணமாகவே கூலிப்படையை ஏவி அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கூலிப்படையை சேர்ந்த 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கஞ்சா வியாபாரியை முன்கூட்டியே கைது செய்யாததால் தான் இந்த கொலை நடைபெற்றதாக உறவினர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டினர். இதையடுத்து முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்காத வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவிட்டுள்ளார்.